×

கிறிஸ்துவர்களின் தவக்காலம் துவங்கியது

ஊட்டி, மார்ச் 3:உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் என்னும் தவக்காலத்தை நேற்று முதல் துவங்கி உள்ளனர். அனைத்து தேவாலயங்களிலும் கடந்த வருட குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி அதனை கிறிஸ்துவ மக்களின் நெற்றியில் பூசுவது வழக்கம். நேற்று சாம்பல் புதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஊட்டி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை வகித்தார். சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, ஆயர் அமுல் ராஜ் பேசுகையில்,``கடந்த இரண்டு வருடமாக கொரோனா என்ற தொற்றால் உலகமே உருக்குலைந்தது. இந்நிலையில், மீண்டும் மனிதனே உலகத்தை உருக்குலைய செய்வது வேதனையாக உள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது வேதனையான ஒன்று. அப்பாவி மக்களின் உயிர் பலியாவது வேதனையளிக்கிறது.

நம் இந்திய மாணவன் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. நம் மாணவர்களை அரசு மீட்டு அழைத்து வர வேண்டும். இந்த தவக்காலத்தில் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்ப அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்’’ என்றார். இதில், பாதிரியார்கள் செல்வநாதன், அபிஷேக் மற்றும் விமல் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினார்கள்.

Tags : Lent of ,Christians ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்