×

கோபாலா... கோவிந்தா முழக்கத்துடன் காவி உடை, கையில் விசிறியுடன் சிவாலய ஓட்டத்தை தொடங்கிய பக்தர்கள் சிவாலயங்களில் இன்று நள்ளிரவில் சிறப்பு பூஜைகள்

நாகர்கோவில், மார்ச் 1 : சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. கோபாலா.. கோவிந்தா முழக்கத்துடன் காவி உடை அணிந்து பக்தர்கள் ஓட தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக ெகாண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (1ம்தேதி) மகா சிவராத்திரி ஆகும். இந்த நாளில் சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி அன்று 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடியே தரிசிக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறும். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் நடைபெறும் மகா சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் நடைபெறும் இந்த சிவாலய ஓட்டத்தில், சிவ பக்தர்கள்  “ கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் கல்குளம்,  விளவங்கோடு தாலுகாவில் 110 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை ஓடி சென்று வழிபடுவார்கள். மகா சிவராத்திரி அன்று வாகனங்களிலும் செல்வது வழக்கமாக உள்ளது.

சிவாலய ஓட்டத்தை முஞ்சிறை அருகே  திருமலையில் இருந்து தொடங்கி, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை,  பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு,  திருபன்றியோடு சென்று இறுதியில் நட்டாலத்தில் சங்கரநாராயணரை தரிசித்து முடிப்பார்கள். இத்தகைய பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் சிவராத்திரிக்கு முதல் நாள் மாலையில் தொடங்கும். அதன்படி  நேற்று மதியம் திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்கியது. பக்தர்கள் காவி உடை அணிந்தும், கையில்  விசிறி, இடுப்பில் திருநீற்று பையுடன் ஓட்டமும் நடையுமாக தங்களது பயணத்தை தொடங்கினர். திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்த பக்தர்கள்,  

சிவராத்திரியான இன்று அதிகாலையில் பன்றிபாகத்திலிருந்து பயணத்தை தொடங்குவர். கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு கோயில்களில் வழிபட்டு விட்டு இன்று இரவு திருநட்டாலம் சிவன் மற்றும் விஷ்ணு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். சிவராத்திரியையொட்டி 12 சிவாலயங்களிலும் அறநிலையத்துறை சார்பில் குடிநீர் வசதிகள், ஆண், பெண் கழிவறை வசதிகள், தற்காலிக கியூ செட் அமைத்தல், ஒலி, ஒளி வசதி ஏற்படுத்துதல், மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று (1ம்தேதி) உள்ளூர் விடுமுறை ஆகும். சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் எல்லா சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. இன்று இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கி விடிய, விடிய நடைபெறும். இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Tags : Shivalaya ,Govinda ,Shiva ,
× RELATED பாத தரிசனத்தின் பலன் என்ன?