×

திருவண்ணாமலையில் பரபரப்பு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளை நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்


திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலை அடுத்த பெரிய பாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளை நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்ேகாரி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் அரசு வெளியிடவில்லை. அதோடு, எந்த பகுதியில் சிப்காட் அமைய உள்ளது என்பது குறித்தும் அறிவிக்கவில்லை. ஆனாலும், திருவண்ணாமலை- செங்கம் சாலையில் பெரிய பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும், அது தொடர்பாக அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு வந்து பார்வையிட்டு சென்றதாகவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

எனவே, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கக்கோரி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளித்துள்ளனர். மேலும், சிப்காட் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பெரிய பாலியப்பட்டு கிராமப்பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விளை நிலங்கள் பாதிக்காத பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டும், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மக்கள் பாதிக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அறிவொளி பூங்கா பகுதியில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் பெரிய பாலியப்பட்டு கிராம மக்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர். அது தொடர்பான கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
மேலும், சிப்காட் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா, எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும். அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ள பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டும், குடியிருப்பு மற்றும் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர். கிராம மக்களின் மனித சங்கிலி போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thiruvnamalay ,
× RELATED திருவண்ணாமலையில் நீர்நிலை,...