×

காரைக்குடி ஓ.சிறுவயலில் பாரம்பரிய நெல் மகசூல் மாநில அளவிலான போட்டி அதிகாரிகள் முன்னிலையில் அறுவடை நடந்தது

காரைக்குடி, பிப். 22: காரைக்குடி அருகே ஓ.சிறுவயலில் பாராம்பரிய நெல் ரகம் பயிர் செய்து மாநில விருதுக்கு விண்ணப்பித்திருந்த விவசாய நிலத்தில் அதிகாரிகள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது.
காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் பகுதியை சேர்ந்தவர் முகேஷ்கண்ணன் (28). ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் பராம்பரிய அழியும் நிலையில் உள்ள பயிர் ரகங்களான மிளகுசம்பா, கருப்புகவுனி, செம்புலிசம்பா, அறுபதாம் குறுவை, கருத்தக்கார், சின்னார், குள்ளங்கார், சீரகசம்பா, கல்லுருண்டை, புல்லக்கார் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தார். இதில் மிளகு சம்பாவை ரகத்தை மாநில அளவிலான பாரம்பரிய பயிர் மகசூல் விருதுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். பயிர் விளைந்த நிலையில் வேளாண் துணை இயக்குநர் சர்மிளா, விருதுநகர் வேளாண் துணை இயக்குநர் வளர்மதி, வேளாண் உதவி இயக்குநர் சண்முகஜெயந்தி, உழவர் பயிற்சி நிலைய அலுவலர் கதிரேசன், மாவட்ட அளவிலான விவசாய சங்க பிரதிநிதி ராமலிங்கம், வேளாண் துணை அலுவலர்கள் சரவணன், கந்தசாமி, அட்மா திட்ட பணியாளர்கள் விஜய்ஆனந்த், கனிமொழி ஆகியோர் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது. 50 சென்டில் எவ்வளவு கிலோ விளைந்துள்ளது என அதிகாரிகள் கணக்கிட்டு அதனை சென்னை வேளாண் இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்புவார்கள். வெற்றி பெறுவர்களுக்கு விருது மற்றும் முதல்பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3ம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இயற்கை விவசாயி முகேஷ்கண்ணன் கூறுகையில், ‘இந்த ஆண்டு பயிரிடப்பட்டுள்ள 9 ரகங்களும் நமது பகுதியின் பாராம்பரிய அழியும் நிலையில் உள்ள ரகங்களாகும். சர்க்கரை, ரத்தகொதிப்பு, மூட்டுவலி, கேன்சர், மார்பக புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்ககூடிய மருத்துவ குணமிக்கது. 3 அடி முதல் 7 அடி வரை வளரும் 70 முதல் 140 நாள் பயிராகும். இளைய தலைமுறையினரை இயற்கை விவசாயத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே என் லட்சியம். மாநில அளவிலான விருது கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது’ என்றார்.

Tags : Karaikudi O. Siruvayal ,
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்