×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கணினி மூலமாக குலுக்கலில் இவிஎம் மிஷின் தேர்வு

தேனி, பிப். 18: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், சின்னமனூர், போடி, கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகளில் 177 வார்டுகளுக்கும் ஆண்டிபட்டி, வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட 22 பேரூராட்சிகளில் உள்ள 336 வார்டுகள் என மொத்தம் 513 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜன.28ம் தேதி முதல் பிப்.4ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் பிப். 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. தொடர்ந்து பிப். 7ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற்றனர். இதில் 6 நகராட்சிகளில் மொத்தம் 177 வார்டுகளுக்கும், 22 பேரூராட்சிகளில் 336 என மொத்தம் 513 வார்டுகளின் இறுதி பட்டியலில் நகராட்சிகளில் இரண்டு வார்டுகளுக்கும் பேரூராட்சிகளில் 5 வார்டுகளுக்கும் போட்டியின்றி கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மீதமுள்ள 506 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல், சின்னங்கள், பூத்துக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் பெரியகுளம் 48, தேனி-அல்லிநகரம் 89, போடிநாயக்கனூர் 70, சின்னமனூர் 45, கம்பம் 69 என 6 நகராட்சிகளில் 361 பூத்துக்களும், ஆண்டிபட்டி கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட 22 பேர் ஊராட்சிகளுக்கு 370 பூத்துக்கள் என மொத்தம் 731 பூத்துக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நகராட்சிகளுக்கு 361 வாக்கு இயந்திரங்களும், பேரூராட்சியில் 370 வாக்கு இயந்திரங்கள் என 731 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 30 சதவீத வாக்கு இயந்திரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர். நேற்று காலை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மைய கூட்டரங்களில் கலெக்டர் முரளிதரன் மற்றும் தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் வாக்குப்பதிவு அலுவலர்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பணியமர்த்தப்படும் பொருட்டு மூன்றாம் கட்ட கணினி மூலமாக குழுக்கல் தேர்வு நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, திட்ட இயக்குனர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல் பிரிவு தங்கராசு மற்றும் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். * உத்தமபாளையம் பேரூராட்சியில் கூடுதலாக 10 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் 35 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில் 10 சதவீதம் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் வரை வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்