×

காவிரிக்கரையில் இருந்தும் நீருக்கு ஏங்கும் ஊரு பழம்பெரும் பேரூராட்சியான வேலூரில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?

பரமத்திவேலூர், பிப். 18:காவிரிக்கரையில் இருக்கும் பழம்பெரும் பேரூராட்சியான வேலூரில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டப்போகும் தலைவர் யார்? என்பது மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.  
கருவேலமரங்கள் சூழ்ந்து நின்ற பகுதி என்பதால் கருவேலமரத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் மாறி வேலூர் என்று அழைக்கப்பட்டது என்பது ஊருக்கான பெயர்க்காரணம். வேலுகண்டர் என்னும் சீமான் ஒருவர் தனது சொத்துக்களை எல்லாம் எளிய மக்களுக்காக எழுதி வைத்தார். அவரை போற்றும் வகையில் வேலூர் என்று அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் உள்ளது. வாழையும், வெற்றிலையும், கோரையும் செழித்து வளரும் காவிரிக்கரையில் இருப்பது இந்த ஊரின் தனிச்சிறப்பு. இங்கே அருள்பாலிக்கும்  காசிவிஸ்வநாதர் கோயில், இந்த பேரூராட்சியின் பிரதான அடையாளம். நாமக்கல் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக திகழ்வது வேலூர் பேரூராட்சி. கிழக்கே நாமக்கல்லும், மேற்கே கரூரும், தெற்கே சேந்தமங்கலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளது. 15.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பேரூராட்சியில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த பேரூராட்சியின் மக்கள் தொகை 25,012.

விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த பேரூராட்சியில் வாழை, வெற்றிலை, கோரைப்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கரூர்-நாமக்கல் நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருப்பதால் விளைபொருட்களை சந்தைப்படுத்த கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகளோடு பெருமை மிகுந்த பரமத்திவேலூர், சேலம் மாவட்டதில் நாமக்கல் இணைந்திருந்த போதே தனி வட்டமாக இருந்தது.1891ம் ஆண்டில் பேரூராட்சியாக உருவெடுத்த பெருமையும் வேலூருக்கு உண்டு. தலைவர்கள் பலர் திறம்பட வழி நடத்திய நிலையில் கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. அதே நேரத்தில் 2016வரை அதிகாரத்தில் இருந்தவர்களும் பேரூராட்சிக்கு பெருமை சேர்க்கும் பணிகளை செய்யவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் 10ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி நிற்கிறது வேலூர் பேரூராட்சி. தற்போதைய நிலவரப்படி 18வார்டுகளை கொண்ட ேவலூர் பேரூராட்சியில் ஆண்கள் 10,496, பெண்கள் 11,377, இதரர்1 என்று மொத்தம் 21,874பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு திமுக கூட்டணி, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, மநீம, அமமுக, நாதக என்று அரசியல்கட்சிகளோடு சுயேட்சைகள் உள்ளிட்ட 60பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்போகும் வார்டு உறுப்பினர்கள் யார்? அந்த வார்டு உறுப்பினர்களால் தேர்வு பெறப்போகும் தலைவர், துணைத் தலைவர் யார்? என்பதே இப்போது பரமத்தி மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து வேலூர் பேரூராட்சி பொதுமக்கள் கூறியதாவது: காவிரிக்கரையில் இருக்கும் அழகிய பேரூராட்சி வேலூர். வெற்றிலை சாகுபடி இங்கு பிரதானமாக உள்ளது. இந்த வெற்றிலைக்கான நீர்ஆதாரம் காவிரியின் துணை ஆறான ராஜவாய்க்காலில் இருந்து கிடைக்கிறது. ஆனால் இந்த ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக மாசுபட்டு கிடக்கிறது. இதை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பயிர்களின் சாகுபடிக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வேலூர் இருந்தாலும் வெளியூர் பேருந்துகள் எதுவும் உள்ளே வருவதில்லை. ஆற்றுப்படுகையில் இந்த பேரூராட்சி இருந்தாலும் குடிநீர் பிரச்னை என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இது போன்ற பல்வேறு அவலங்கள் பேரூராட்சி முழுவதும் உள்ளது. இது ஒரு புறமிருக்க அடிப்படை வசதிகள் என்பதும் பல ஆண்டுகளாக முழுமை பெறாமல் உள்ளது. இவை அனைத்தையும் தீர்த்து வைக்கும் சாத்தியம் எந்த வேட்பாளருக்கு உள்ளது என்று சிந்தித்து  வாக்களிக்க உள்ளோம். வார்டு உறுப்பினர்களாக தேர்வு பெறும் அவர்களில் ஒருவர் தலைவராகவும், துணைத்தலைவராகவும் இருந்து பேரூராட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Vellore ,Kavirikarai ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...