×

கம்பம் பகுதியில் வரத்து குறைவால் சாம்பாரில் இல்லை ‘முருங்கைக்காய்’ கிலோ ரூ.200க்கு விற்பனை

கம்பம், பிப். 17: கம்பம் பகுதியில் வரத்து இல்லாததால், ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.200க்கு விற்பனையானது. பொதுவாக எல்லா சீசனிலும் முருங்கைக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனையாகும். ஆனால், இந்தாண்டு குளிர்க்காலம் தொடங்கியது வரை முருங்கைக்காய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. குளிர் காரணமாக விளைச்சல் குறைவானதால் வரத்து குறைவானது. இதனால், முருங்கை விலை உயர தொடங்கியது. நேற்று கம்பம் உழவர் சந்தையில் முருங்கை விலை அதிகபட்சமாக ரூ.170க்கும் வெளி மார்க்கெட்டில் ரூ.200க்கும் விற்பனையானது. தை மாதம் முடிந்து மாசி மாதம் தொடர் முகூர்த்தம் என்பதால் அதிகமான கல்யாண வீட்டில் சாம்பாருக்கு முருங்கைக்காய் பயன்பாடு இருக்கும். ஆனால், தற்போது முருங்கை விலை தாறுமாறாய் உள்ளதால் கல்யாண வீடுகளில் முருங்கைக்காய் இல்லாத சாம்பார் வைக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறும்போது, இன்னும் ஓரிரு வாரங்களில் சீதோஷ்ண நிலை மாறி குளிர் மாறும் போது முருங்கைக்காய் விலை குறைய தொடங்கும், என்றனர்.

Tags : Sambar ,Kambam ,
× RELATED கிறுகிறுக்க வைக்குது கோடை வெயில்...