×

கும்பகோணத்தில் இன்று மாசி மக தீர்த்தவாரி

கும்பகோணம், பிப்.17: கும்பகோணத்தில் இன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி அனைத்து கோயில்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி இன்று காலை நடைபெற உள்ளதால் பாதுகாப்பு பணியில் 350க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலேயே ஆன்மீக திருவிழாக்களில் மிக முக்கியமானது மாசி மக தீர்த்தவாரி ஆகும். இந்நிகழ்ச்சியின் போது கும்பகோணத்தில் உள்ள சைவ வைணவக் கோயில்கள் அனைத்திலும் சாமி புறப்பாடு நடைபெற்று அனைத்தும் தீர்த்தவாரி நேரமான காலை 12 மணிக்கு மகாமககுளத்தை வந்தடையும்.இந்நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் வருவார்கள். இந்நிலையில் மகாமக தீர்த்தவாரி இன்று காலை நடைபெற உள்ளதால் கும்பகோணம் மாநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தீர்த்தவாரி நடைபெறும் நேரமான காலை 12 மணிக்கு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மகாமக குளத்தை சுற்றி கூட உள்ளதால் குளத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மாசி மக உற்சவம் இன்று நடைபெற உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை பாதுகாத்து வழிநடத்த தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா ஆகியோரின் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். மேலும் மகாமக குளத்தை சுற்றி நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து நவீன கேமராக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்கப்பட உள்ளது. இதைத் தவிர பொதுமக்களுடன் 25-க்கும் மேற்பட்ட போலீசார்கள் சாதாரண உடையில் கண்காணித்து வருவார்கள். இதைத் தவிர 150-க்கும் மேற்பட்ட சாரணியர்கள், ஊர்க்காவல் படையினரும் போலீசாருடன் பணியாற்ற உள்ளனர். மகாமக குளத்தில் இரண்டு படகுகளில் தீயணைப்பு துறை வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். வெளியூர்களிலிருந்து மாசிமக உற்சவத்தை காண வரும் பக்தர்களின் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால், வழியாக கும்பகோணம் வரும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக வந்து கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள எல்.பி.எஸ் ரோடு மற்றும் உழவர் சந்தை பகுதியிலும் நிறுத்திவிட்டு மகாமககுளம் வரவேண்டும். திருச்சி, தஞ்சாவூர், வழியாக கும்பகோணம் வரும் பக்தர்கள் உச்சிப்பிள்ளையார் கோவில் வந்து தென்புறம் திரும்பி ஆர்.சி.மார்னிங் ஸ்டார் பள்ளி அருகே உள்ள இடங்களிலும், கடலங்குடி தெரு பகுதிகளிலும் தங்களது வாகனங்களை விட்டுவிட்டு மகாமககுளத்தில் வந்து நீராடி செல்ல வேண்டும். இவ்வாறு ேபாலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Masi Maga Tirthavari ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...