செழிப்பான பூமியில் சீர்கேடுகள் அதிகரிப்பு மோகனூர் பேரூராட்சியின் புதிய தலைவர் யார்?

மோகனூர்,பிப்.15: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சியில் வெற்றிவாகை சூடப்போகும் வேட்பாளர்கள் யார்? அவர்கள் தேர்ந்தெடுக்கப்போகும் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பு உள்ளது. புராணங்களில் மோகூர் என்று அழைக்கப்பட்ட ஊரே தற்போது மோகனூர் என்று மருவி நிற்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சோழமண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், முகம் போன்றும் இருந்ததால் முகவனூர் என்று அழைக்கப்பட்டுள்ளது என்று கொங்குமண்டல சதகப்பாடல்கள் ஆதாரம் காட்டுகிறது. மோகனூர் பேரூராட்சியானது சுற்றிலும்  கோயில்கள் சூழ்ந்த பகுதியாக விளங்குகிறது. கிழக்கே நவலடியான் கோவில், மேற்கே வள்ளியம்மன் கோவில், வடக்கே காந்தமலை முருகன் கோவில், மத்திய பகுதியில் திரெளபதி அம்மன்,  பகவதி அம்மன் கோவில்கள் உள்ளது. தெற்கே அசலதீபேஸ்வரர் கோவில், வெங்கட்ரமணன் கோவில் உள்ளது.  இது மட்டுமின்றி வள்ளியம்மன் கோவில் உள்ளிட்ட இதரகோயில்களும் உள்ளது.

கோவில்கள் நிறைந்த பேரூராட்சி என்பதோடு மட்டுமல்லாமல், நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் என்ற பெருமைக்கும் உரியது. அவரது தந்தை மோகனூர் காவல்நிலையத்தில் ஜவானாக (போலீஸ்) பணியாற்றி உள்ளார். அக்ரஹாரத்தில் வசித்துள்ளார். கவிஞரின் உறவினர்கள் மோகனூரில் இப்போதும் வசித்து வருகின்றனர்.டாடா சேர்மன் சந்திரசேகரன் மோகனூர் அக்ரஹாரத்தில் வசித்தவர் தான். எழுத்தாளர் ஜெகநாதன் இங்கு வாழ்ந்தவர் என்பதும் இன்றைய தலைமுறை அறியாத ஒன்று.  கரும்பும், வெற்றிலையும் செழித்து வளரும் மோகனூர் என்ற பெயரைச் சொன்னதும் சர்க்கரை ஆலை, மனத்திரையில் ஓடுவதும் தவிர்க்க முடியாத ஒன்று.

இப்படி சிறப்புகள் சூழ்ந்த மோகனூர் 1996ம் ஆண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மோகனூர் பேரூராட்சியில் அதே ஆண்டில் முதன்முதலாக திமுக சார்பில்  போட்டியிட்ட உடையவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ல் சுயேட்சையாக போட்டியிட்ட உடையவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2006-11 ல் திமுக மாவட்ட இலக்கிய அணி புரவலர் அர்ச்சுனன் மனைவி கவுசல்யா தலைவராகவும், 2011-16 ல் அப்போது அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், தற்போது அதிமுக பேரூர் செயலாளராக உள்ள தங்கமுத்துவின் தாயார் லட்சுமிராமசாமியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடங்கியதால் அடுத்தடுத்து தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் மேம்பாட்டு பணிகள் எதுவும் நடக்கவில்லை.  இந்தநிலையில் 10ஆண்டுகளுக்கு பிறகு வரும் 19ம்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி நிற்கிறது மோகனூர் பேரூராட்சி. ஆண் வாக்காளர்கள் 5687 பேரும், பெண் வாக்காளர்கள் 6371 பேரும், இதரர் ஒருவரும் என மொத்தம் 12,059 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 15வார்டுகளை கொண்ட மோகனூர் பேரூராட்சியில் திமுக 13 வார்டுகளிலும், அதிமுக 15 வார்டுகளிலும்,  பாஜக 3 வார்டுகளிலும், காங்கிரஸ்1, சுயேட்சைகள் 12 வார்டுகளிலும் என்று 45வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இவர்களில் மக்கள் தேர்ந்தெடுக்கப்போகும் கவுன்சிலர்கள் யார்? அந்த கவுன்சிலர்கள் மூலம் தேர்வாகும் தலைவர், துணைத்தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

இது குறித்து  மோகனூர் பேரூராட்சி மக்கள் கூறுகையில், ‘‘காவிரிக்கரையில் ஏராளமான புண்ணியத்தலங்கள் நிறைந்து விளங்குவது மோகனூர் பேரூராட்சி. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு நீரேற்றும் நிலையங்களும் உள்ளது. ஆனால் காவிரியாற்றின் முகப்பு பகுதியான மோகனூரில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவது, கோயில்களுக்கு வரும் பக்தர்களை மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களையும் முகம் சுழிக்க வைக்கிறது. ஆற்றின் கரையில் குப்பை கூளங்களும், பாட்டில்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கிக்கிடக்கிறது. காவிரி பாயும் செழிப்பான ஊரில் மாசுக்கள் அதிகரிப்பது வேதனைக்குரியது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதோடு அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக செய்ய வேண்டியதும் அவசியம். இதற்கான பணிகளில் முனைப்பு காட்டுவதோடு மட்டுமன்றி முடித்து வைக்கும் நம்பிக்கைக்கு உரிய வேட்பாளர்களுக்கே எங்கள் வாக்கு. அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரும், துணைத்தலைவரும் திறம்பட செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்,’’ என்றனர்.

Related Stories: