×

வேலூர் மத்திய சிறையில் தணிக்கை குழு ஆய்வு சிறைத்துறை ஏடிஜிபிக்கு அறிக்கை உணவு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு?

வேலூர், பிப்.15:வேலூர் மத்திய சிறையில் உணவு பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என ஐஜி அலுவலக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இததொடர்பாக ஏடிஜிபிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வெளியாட்கள் சிறைக்குள் சென்று வந்ததாகவும் சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளது. இந்த புகார்கள் குறித்து விசாரிக்க, கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரத்திற்கு சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டார்.அதன்படி வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி அலுவலகத்தில், கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கடந்த மாதம் 2 நாட்கள் விசாரணை நடத்தினார். பின்னர் சிறை காவலர் குடியிருப்பில் நடத்திய சோதனையில் ₹3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் தொடர்பாக யாரும் உரிமை கோரவில்லை என்பதால் அரசு கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறையில் கைதிகளுக்கு உணவு வழங்க காஸ் சிலிண்டர், காய்கறி மற்றும் உணவு பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த கடந்த வாரம் சென்னை ஐஜி அலுவலகத்தில் இருந்து தணிக்கை குழுவினர் வந்தனர். அவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கைதிகளுக்கான உணவு பொருட்கள் வாங்கியதற்கான செலவினங்கள் குறித்த ஆவணங்களை தணிக்கை செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறைத்துறை ஏடிஜிபிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையில் வேலூர் மத்திய சிறை தொடர்பான புகார்கள் குறித்து, கடந்த மாதம் கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை சிறைத்துறை ஏடிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore Central Jail Audit Committee Inspection Prisons ,ADGP ,
× RELATED போதைப்பொருள் விற்றவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: காவல்துறை பேட்டி