×

மாசி மாத பிரமோற்சவ தேரோட்டம் தொடங்கியது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் பிரசித்திபெற்ற வள்ளிமலை முருகன் கோயிலில்

பொன்னை, பிப்.12: பொன்னை அருகே பிரசித்திபெற்ற வள்ளிமலை முருகன் கோயிலில் மாசி மாத தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது. அதையொட்டி 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேரின் மீது ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நேற்று மாலை 5.30 மணியளவில் முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், மாசிமாத பிரமோற்சவத்தை முன்னிட்டு கடந்த மாதம் 26ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 4ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்.

பின்னர் 5ம் தேதி மலை உச்சியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 6ம் தேதி கேடய உற்சவத்தில், சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனத்திலும், 7ம் தேதி தங்க மயில் வாகனத்திலும், நேற்று முன்தினம் நாக வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து மாலை 3 மணி முதல் 4.15 மணிக்குள் கலசம் தேரின் மேல் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும் நேற்று சூர்ண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு மூலவர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முதல் வரும் 14ம் தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். பின்னர் 15ம் தேதி முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் பொன்னை இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையில் மேல்பாடி எஸ்ஐ கார்த்தி மற்றும் பொன்னை எஸ்ஐ பிரகாசம் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Vallimalai Murugan Temple ,
× RELATED வள்ளிமலை முருகன் கோயிலில் 2ம் நாள்...