×

அரசு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்த வழிவகை ஏற்படும்

புதுக்கோட்டை, பிப்.11: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பாக, இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு அமைப்பு குழுவினருடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய்த்துறை, போலீஸ், கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் தெரிவித்ததாவது, அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும். அதனடிப்படையில் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் முழு உடல் தகுதி பெற்றுள்ளனவா என்பது குறித்தும், அவைகளுக்கு எவ்வித போதைப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதனை கால்நடை பராமரிப்புத் துறையினர் மூலமாக உறுதி செய்ய வேண்டும்.

மேலும் வீரர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். போட்டிகளில் பாதிப்பு ஏற்படும் மனிதர்கள் மற்றும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான அளவில் மருத்துவ குழுவினர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டியை அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்துவது உறுதி செய்வதன் மூலம் இப்போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதற்கு வழிவகை ஏற்படும் என்றார். கூட்டத்தில் டிஆர்ஓ செல்வி, ஆர்டிஓக்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.சம்பத், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Jallikkattu ,
× RELATED அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை...