×

வாரியத்தலைவர் பதவி கிடைக்குமா? பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களுடன் நிர்மல்குமார் சுரானா திடீர் ஆலோசனை

புதுச்சேரி, பிப். 11: புதுச்சேரியில் பாஜகவுக்கு எதிராக சுயேட்சைகள் போர்க்கொடி  தூக்கியுள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்களுடன் கட்சியின் மேலிட  பார்வையாளரான நிர்மல்குமார் சுரானா திடீரென ஆலோசனை நடத்தினார். அப்போது  தொகுதி புறக்கணிப்பு, அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக காரசார விவாதம்  நடந்ததால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  புதுச்சேரியில் சுயேட்சை எம்எல்ஏக்களான உழவர்கரை சிவசங்கர், ஏனாம்  கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், திருபுவனை அங்காளன் ஆகியோர் பாஜகவுக்கு  ஆதரவளித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் தங்களது தொகுதி  புறக்கணிக்கப்படுவதாக கூறி பாஜகவுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்  போவதாக சபாநாயகரை சந்தித்து முறையிட்டனர். பின்னர் கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜனை அங்காளனை தவிர மற்ற 2 சுயேட்சைகளும் சந்தித்து பேசினர்.  அவர்களிடம் தொகுதி பிரச்னைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் கூறினார்.

இதனிடையே  பாஜக தலைமை உத்தரவுக்கிணங்க நேற்று முன்தினம் சுயேட்சைகளான சிவசங்கரன்,  கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் இருவரும் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய இணை  அமைச்சர் பிரகலாத் சிங் படேலை சந்தித்து பேசினர். அப்போது  வளர்ச்சி பணிகளில் தங்களது தொகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதை ஆதாரங்களுடன்  முறையிட்டனர். அதற்கு மத்திய அமைச்சர் படேல், மத்திய உள்துறை அமைச்சரை  சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், குறைகள் அனைத்தும் விரைவில்  நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.

 அதன்பேரில் அடுத்த வாரம் 2  எம்எல்ஏக்களும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்து தொகுதி பிரச்னைகள் மட்டுமின்றி வாரியத் தலைவர் பதவி  விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மேலிட பார்வையாளரான நிர்மல்குமார் சுரானா  நேற்று திடீரென புதுச்சேரி வந்தார். காமராஜர் சாலையில் உள்ள தனியார்  ஓட்டலுக்கு வந்த அவரை மாநில பாஜ தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர்  நமச்சிவாயம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும்  வரவேற்றனர்.  பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் நிர்மல்குமார்  சுரானா ஆலோசனை நடத்தினார்.

இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம்,  மாநில பாஜ தலைவர் சாமிநாதன், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார்,  விவிலியன் ரிச்சர்ட் மட்டுமின்றி சுயேட்சை எம்எல்ஏக்கள் சிவசங்கர்,  கொல்லப்பள்ளி சீனுவாச அசோக், அங்காளன், நியமன எம்எல்ஏக்கள் விபி ராமலிங்கம்  அசோக்பாபு, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாஜக  ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் மட்டுமின்றி மற்ற எம்எல்ஏக்களில் சிலரும்  தங்களது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக சரமாரி குற்றச்சாட்டுக்களை  நிர்மல்குமார் சுரானாவிடம் முன்வைத்தனர்.

வாரியத்தலைவர் பதவியை நிரப்புவதில் ரங்சாமிக்கு உடன்படாதது குறித்தும், கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள்,  அதிகாரிகள் நடவடிக்கைகள் குறித்து காரசாரமாக பேசியதாக தெரிகிறது. நிர்மல்குமார் சுரானா சமாதானப்படுத்தியதால், இவ்விவகாரம் தொடர்பாக  முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏக்களிடம் மேலிட  பார்வையாளர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.   இருப்பினும் அதிருப்தி எம்எல்ஏக்கள் விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்திக்கும் முடிவில் உறுதியாக உள்ளனர்.

Tags : Nirmal Kumar Surana ,BJP ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...