×

திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை கூட்டம்

திண்டுக்கல், பிப். 10: திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சியினர் வேட்பாளர்களுக்கான தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமை வகித்தார். இதேபோல் பட்டிவீரன்பட்டியில் தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி வேட்பாளர்களுடனான கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமை வகிக்க, எஸ்ஐ சின்னப்பன் முன்னிலை வகித்தார். கூட்டங்களில், பொது கூட்டங்களுக்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுரைகள் பின்பற்றப்பட வேண்டும், கூட்டங்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும், ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் நேரம், துவங்குமிடம், வழித்தடம், முடிவடையும் இடம் குறித்து முன்னதாக அனுமதி பெற்றிருக்க வேண்டும், தேர்தல் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேலாக வேட்பாளர் செலவினங்களை மேற்கொள்ள கூடாது.

இதன் கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும், பொதுமக்களிடம் சாதி, சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்பட கூடாது, வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்த கூடாது. வாக்களர்களுக்கு எவ்வகையிலும் லஞ்சமோ அல்லது வெகுமதியோ வழங்குதல் கூடாது, வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்கு சேகரித்தல்- ஆதரவு கோர கூடாது, ஊர்வலங்கள் செல்ல தடை உள்ளதால் கூட்டமாக சென்று ஓட்டு கேட்காமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஓட்டு கேட்க வேண்டும். கிராம பகுதிகளில் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு எழும் சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு தீர்த்து கொண்டனர்.

Tags : Pattiviranapatti ,Dindigul ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...