×

மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 7,64,731 வாக்காளர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் உள்ள 108 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 242 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 2,20,413 வாக்காளர்கள் உள்ளனர். அச்சிறுப்பாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பேரூராட்சிகளில் உள்ள 99 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 122 வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து, 91,618 பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 277 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, 1067 வாக்குச்சாவடி மையங்களில் 10,76,762 வாக்காளர்கள் உள்ளனர்.

மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாதிரி நடத்தை விதிகள், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முடியும் வரை அமலில் இருக்கும். இதில், அனைத்து வேட்பாளர்களும் அன்றாட செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டும். தேர்தல் முடிந்து அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களிடமும், பேரூராட்சிகளில் செயல் அலுவலரிடமும் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. இதுதவிர, கட்டணமில்லா தொலைபேசி எண் 18005997625 மற்றும் 044-27427468 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.

Tags : Maraimalai ,Nagar ,Municipal ,Office ,
× RELATED நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி பகுதியில் நாளை மின்தடை