×

ஜெயங்கொண்டம் அருகே மரப்பட்டறையை அகற்றக் கோரி சாலையோரம் குடும்பத்துடன் சமைத்து சாப்பிடும் போராட்டம்

ஜெயங்கொண்டம், பிப்.10: ஜெயங்கொண்டம் அருகே சுகாதார சீர்கேட்டை உடல் பாதிப்பை ஏற்படுத்தும் மரப்பட்டறையை அகற்றக் கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாலையோரம் சமைத்து சாப்பிடும் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி(55) இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் கட்டில், பீரோ உற்பத்தி செய்கின்ற தனியார் மரப்பட்டறை தொழில் நிறுவனம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. கடந்த 2 வருடமாக செயல்பட்டு வரும் மரப் பட்டறையால், தெய்வசிகாமணி குடும்பத்தினர் மிகவும் உடல்நலம் பாதிக்கப் பட்டதாக தெரிகிறது. இதில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் நோய்வாய்ப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதேபோன்று மரத்தூள் காற்றில் பறந்து ஒவ்வாமை காரணமாக அவரது மகள் சசிரோஜா என்பவரும் அடிக்கடி நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார். மேலும் மரப்பட்டறையில் இருந்து வரும் சப்தம் காரணமாக இரவு நேரங்களில் யாரும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இப்படி பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி அக் குடும்பத்தினர் இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலருக்கும் முறைப்படி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 6 மாத காலமாக கடும் அவதிப்பட்டு வந்த தெய்வசிகாமணி குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட முடிவுக்கு வந்தனர். அதன்படி கடந்த இரு தினங்களாக வீட்டில் உள்ளே சமைக்காமல் வீதிக்கு வந்து சமைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் 2ம் நாளாக ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயில் என்று பாராமல் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீதியில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டது காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் இதுபற்றி அக்குடும்பத்தினர் தெரிவிக்கையில் கடந்த 6 மாத காலமாக போராடியும் எந்தவித பயனும் இல்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வீதியில் இறங்கி போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Tags : Jayankondam ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...