×

ரதசப்தமி விழாவையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் பங்கேற்பு

கலசபாக்கம், பிப்.8: கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியன்று அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று திருவண்ணாமலையிலிருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்க புறப்பட்டு வந்தார். அப்போது, துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து, கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் அருகே உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் வந்தபோது மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், கலசபாக்கத்தில் இருந்து திரிபுரசுந்தரி உடனாய திருமாமுடீஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் உடனாய அண்ணாமலையார் நேருக்கு நேராக செய்யாற்றில் சங்கமித்தனர். இதனை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், செய்யாற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. செய்யாற்றில் அமைக்கப்பட்டிருந்த மெகா பந்தலில் அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் திரிபுரசுந்தரி உடனாய திருமா முடீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீர்தவாரி நிறைவடைந்ததையடுத்து, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று இரவு புறப்பட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தடைந்தார்.

Tags : Annamalaiyar Tirthawari ,Kalasapakkam ceremony ,Rathasapthami festival ,
× RELATED அக்னி வசந்த விழாவில் அர்சுனன் தபசு...