×

பாலக்கோடு அருகே பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

தர்மபுரி: பாலக்கோடு அருகே, துக்க வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில், சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே ஜக்கசமுத்திரம் ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட 2 பேர், சரக்கு வேனில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளம் புதூர் பகுதிக்கு நேற்று சென்றனர். அங்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மாரண்டஅள்ளியை தாண்டி சாஸ்திரமுட்லு என்னுமிடத்தில், மதியம் 2 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலை இறக்கமாக இருந்ததால் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன், அங்குள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி, படுகாயமடைந்து கதறி துடித்தனர். அதனைக் கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உடல் நசுங்கிய ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த முருகன் மனைவி தீபா(30), சின்னபையன் மனைவி தங்கம்மாள்(55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 18 பேரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதப்பன்(55) என்பவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் காளி(35) தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான டிரைவர் காளியை தேடி வருகின்றனர்.

Tags : Balakot ,
× RELATED போர் விமானி அபிநந்தன் கதையில் பிரசன்னா