×

ஓட்டலில் சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 5 பேருக்கு வாந்தி மருத்துவமனையில் சிகிச்சை; ஒடுகத்தூரில் பரபரப்பு பரோட்டாவுக்கு ஊற்றிய குருமாவில் அரணை

ஒடுகத்தூர், பிப்.2: ஒடுகத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டாவுக்கு அரணை விழுந்திருந்த குருமா சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 5 பேருக்கு வாந்தி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மகமதுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்(35), கூலித்தொழிலாளி. இவரது மகன் ஆகாஷ்(11), மகள் அனுஷ்கா(9), மற்றும் பொய்கை கிராமத்தை சேர்ந்த உறவினர்களது குழந்தைகளான ஷாலினி(11), ரித்திக்ரோஷன்(7) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் காலை பஸ்சில் பாலபாடி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் வீடு திரும்பினர்.

அப்போது, குருவராஜபாளையம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கு, அவர்கள் பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட தொடங்கினர். பின்னர், ஓட்டல் ஊழியர்கள் பரோட்டாவிற்கு தேவையான குருமாவை கொண்டு வந்து கொடுத்தனர். அதனை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் 5 பேரும் வாந்தி எடுத்தனர். இதைபார்த்த, ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வந்து அருளிடம் கேட்டபோது குருமாவில் அரணை செத்து கிடக்கிறது என்று கூறினார். பின்னர், அதனை பார்த்த போது துண்டு துண்டாக அரணை செத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேருக்கும் உப்பை தண்ணீரில் கலந்து கொடுத்தனர்.

பின்னர், ஆட்டோவில் ஏற்றி சென்று மராட்டியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். இதற்கிடையில் தகவலறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை ஓட்டலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறு நடந்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ‘இதுபோல் தவறுகள் மீண்டும் நடந்தால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kuruma ,Odugathur ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...