×

திருவண்ணாமலையில் நடந்தது திருக்குறளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வலமிருந்து இடமாக திருக்குறள் எழுதி யோகா ஆசிரியை விழிப்புணர்வு

திருவண்ணாமலை,பிப்.2: திருவண்ணாமலையில் திருக்குறளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யோகா ஆசிரியை திருக்குறளை வலது புறத்தில் இருந்து இடது புறமாக எழுதி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வழக்கமாக திருக்குறள் இடது புறத்திலிருந்து எழுதப்படும். ஆனால், யோகா பயிற்சியாளர் கல்பனா என்பவர் நேற்று திருக்குறளை பலகையில் வலமிருந்து இடது புறமாக எழுதி (மிரர்ரைட்டிங்) புதிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ்வாறு எழுதப்படும் எழுத்துக்களை நம்மால் எளிதில் படிக்க முடியாது.

இதனை படிக்க வேண்டும் என்றால், கண்ணாடியில் காண்பித்து தான் படிக்க முடியும். இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும் பலகையை கண்ணாடியில் காண்பித்தால் வழக்கமான எழுத்துக்கள் போன்று கண்ணாடியில் தெரியும். இவ்வாறு எழுதும் முறை மிகவும் கடினமானது, ஆனால் திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த யோகா ஆசிரியை கல்பனா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒரு திருக்குறளை மட்டும் இவ்வாறு எழுதாமல் 1,330 திருக்குறளையும் தன்னால் வலமிருந்து இடமாக எழுத முடியும் என்றும், இதற்காக அதிக பயிற்சி எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு...