×

கொரடாச்சேரி அருகே நிலப்பிரச்னையில் சகோதரர்கள் கோஷ்டி மோதல்: 12 பேர் கைது

நீடாமங்கலம், ஜன.31: கொரடாச்சேரி அருகே மேல எருக்காட்டூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன்கள் அசோகன்(62), அன்பழகன் (61), முருகேசன்(48). இவர்கள் அண்ணன் தம்பி ஆவார்கள். இதில் அசோகன், அன்பழகன் இருவருக்கும் இடம் மற்றும் நில பிரச்னைகள் இருந்து வந்தது. இவர்கள் இருவரும் எருக்காட்டூரில் விவசாயம் செய்து வந்த நிலையில் அசோகன் தனக்கு சொந்தமான இடத்தில் இரும்பு முள்வேலி வைத்துள்ளார். அதனை அன்பழகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு வந்து வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரிவாள், கம்பி, கட்டை, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து அசோகன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வேலியை சேதப்படுத்தியதோடு அதனை தடுக்க வந்த தனது மனைவி சாந்தாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். அதே போன்று அன்பழகனும் தன்னை அசோகன் உள்ளிட்ட அவரது உறவினர்களும் நண்பர்களும் தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

இருவரது புகாரின் பேரில் கொரடாச்சேரி எஸ்ஐ., மோகன்ராஜ் வழக்குப்பதிந்து அசோகன் கொடுத்த புகாரில் 12 பேரில் அன்பழகன்(61), வீரகுமார்(52), ராஜசேகர்(56), ராபர்ட்(26), முருகபாண்டி(46), கண்ணப்பன்(35), ராமன்(22) அய்யப்பன்(47)், முனியாண்டி(76), குணா(எ)மகாலிங்கம்(48) உள்ளிட்ட 10 பேரை கைது செய்து 2 பேரை தேடி வருகின்றனர். அதுபோல் அன்பழகன் கொடுத்த புகாரில் 7 பேரில் அசோகன்(62), ரமேஷ்(50) ஆகியோரை கைது செய்து மற்ற 5 பேரை தேடி வருகின்றனர். அசோகன் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் திருவாரூர் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி சொத்து தொடர்பாக ஆவணங்கள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Koradacheri ,
× RELATED தமிழ்நாட்டுக்கு எதையும் தராத...