×

தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் மெகா உழவார பணி தென் மாவட்ட பக்தர்கள் பங்கேற்பு


நெல்லை, ஜன. 31: மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் 2வது மெகா உழவாரப் பணி நடந்தது. இதில் தென்மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டுக்கான மஹா சிவராத்திரி விழா மார்ச் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தச்சநல்லூரில் உள்ள பழமை வாய்ந்த காந்திமதி அம்பாள் உடனுறை  நெல்லையப்பர் கோயிலில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றம் சார்பில் உழவாரப்பணி நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி கடந்த ஜன. 15ம் தேதி சனி பிரதோஷத்தன்று முதலாவது மெகா உழவாரப்பணி நடந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கோயிலில் புதர்மண்டிக் கிடந்த வளாகத்தை சீரமைத்தனர். கோபுர சுவர்களில் வளர்த்திருந்த செடிகளை அகற்றல், புதிதாக மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2வது மெகா உழவாரப் பணி நேற்று நடந்தது.

 இதில் தூத்துக்குடி திருத்தாண்டகவேந்தர் உழவாரப்பணிக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உழவாரப் பணிக்குழுவினர் பங்கேற்று கோயில் வளாகத்தை சீரமைத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.  மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து புதிதாக பைப்லைன் அமைத்து புதிய மோட்டார் பொருத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அத்துடன் கோ சாலையில் தண்ணீர் வசதி செய்துகொடுக்கப்பட்டு மாதாவுக்கு கோயில் சுவர்களில் வெள்ளையடித்து காவி பட்டையிடப்பட்டது. அத்துடன் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் திருவாச்சிகள், கோயில் விளக்குகள், செம்பு பாத்திரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டதால் பளிச்சென காட்சியளித்தன. காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் மகேஷ்வர பூஜையை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடந்தது. ஏற்பாடுகளை  சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags : Southern District ,Dachanallur Nellaiyappar Temple ,
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...