×

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண் மட்டும் மனு தாக்கல்

தூத்துக்குடி, ஜன. 29: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.19ம் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர்களும், 3 நகராட்சியில் 81 வார்டு உறுப்பினர்களும், 18 பேரூராட்சியில் 273 வார்டு உறுப்பினர்களும் என  மொத்தம் 414 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது.

தூத்துக்குடி மாநகராட்சியில் கமிஷனர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், ஒவ்வொரு 10 வார்டுகளுக்கும் ஒரு உதவி தேர்தல் நடத்தும் வீதம் 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், கோவில்பட்டி நகராட்சியில் கமிஷனர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், 4 உதவி தேர்தல் அலுவலர்களும், காயல்பட்டினம் நகராட்சியில் கமிஷனர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், 2 உதவி தேர்தல் அலுவலரும், திருச்செந்தூர் நகராட்சியில் கமிஷனர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

18 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட  பேரூராட்சிகளில்  தேர்தல் நடத்தும் அலுவலராகவும், 36 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று வேட்பாளர்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களை நிறுத்தி விட்டு வர அறிவுறுத்தப்பட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் நபர்களுக்கு விவரங்கள் தெரிவிக்க வசதியாக தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும்  நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்களை விநியோகம் செய்வதற்காக தனியாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் உள்ளாட்சிகளில் எந்த வரியும் நிலுவை இல்லை என்று சான்றிதழ் வழங்குவதற்காகவும் தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வேட்பாளர்கள் ஏராளமானோர்  வேட்புமனுக்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மாநகராட்சியில் 120க்கும் மேற்பட்டோரும், கோவில்பட்டி நகராட்சியில் 80 பேரும், காயல்பட்டினம் நகராட்சியில் 63 பேரும், பேரூராட்சிகளில் ஆறுமுகநேரியில் 15 பேரும், ஆத்தூரில் 12 பேரும் வேட்புமனு பெற்றுச் சென்றுள்ளனர். மாநகராட்சி வார்டுகளுக்கு  நேற்று மாலை 5 மணி வரை ஒருவர் கூட  வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

கோவில்பட்டி நகராட்சியில் 9வது வார்டுக்கு பெண் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளார். மாவட்டத்தில் நேற்று வேறு யாரும் எந்த பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் வரும் 4ம் தேதி வரையும், 5ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும் நடக்கிறது. 7ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் நடைபெறும் அனைத்து அலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாநகராட்சியில் எஸ்பி ஆய்வு
தூத்துக்குடி  மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இதனை  முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில்  டவுன் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 45  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநகராட்சி  அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஜெயக்குமார், ஆணையர்  சாரூஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில்: நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஏடிஎஸ்பிகள்  மேற்பார்வையில் 15 டிஎஸ்பிகள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3  நகராட்சிகள் மற்றும் 18 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து வேட்பு  மனுதாக்கல் செய்யும் இடங்களில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபடுவர். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 319  வாக்குச்சாவடிகளில் 66 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று  கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு போடப்பட உள்ளது.  மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

வேட்புமனு படிவங்கள் பெறுபவர்கள் மற்றும் வேட்புமனு தாக்கல்  செய்பவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் சம்பந்தமான அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டு உள்ளது, என்றார். ஆய்வின்போது டிஎஸ்பி கணேஷ், பயிற்சி டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்பிரகாஷ், மயிலேறும்பெருமாள் உட்பட காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி  அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Thutukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம்...