×

தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வேப்பூரில் வரவேற்பு

வேப்பூர், ஜன. 29:  டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் இந்திய விடுதலை 75 என்ற தலைப்பின் கீழ் விடுதலை போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றும் விதமாக தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டது. இந்த ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. நாட்டுப்பற்றிலும், விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இந்த ஊர்தி இடம்பெறும் என்றும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக இந்த அலங்கார ஊர்தி அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி, சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டிற்கு வந்தது. இந்த ஊர்தியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வரவேற்றார். இதில் கோட்டாட்சியர் ராம்குமார், வேப்பூர் வட்டாட்சியர் மோகன், திட்டக்குடி டிஎஸ்பி சிவா, செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் பாலமுருகன். வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, மங்களூர் ஒன்றியத்தலைவர் சுகுணா சங்கர், மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், விசிக ஒன்றிய செயலாளர் சந்தோஷ், தவாக நிர்வாகி சுரேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Government of Tamil Nadu Decorative Vehicle ,Veppur ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான்...