×

சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா

விருத்தாசலம், ஜன. 29: விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் ஊராட்சியில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கான சுடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனி நபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மயான பாதை கேட்டு போராடி வந்த நிலையில், அரசு அவர்களுக்கென மயான பாதை அமைத்து கொடுத்துள்ளது. ஆனால் அந்த பாதையை தனி நபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட இடத்தில் சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பழங்குடி இருளர் பேரவை மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, மாவட்ட அமைப்பாளர் சடையன் பெயரன், நகர செயலாளர்கள் விருத்தாசலம் முருகன், மங்கலம்பேட்டை அம்பேத், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, துணை செயலாளர் தென்றல், ஒன்றிய பொறுப்பாளர் அய்யாதுரை, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் செந்தில்முருகன், பழங்குடி இருளர் பேரவை அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tarna ,Panchayat Council ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...