×

சாலையோர ஓட்டல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

ஈரோடு :  ஈரோட்டில் சாலையோர பானிபூரி, ஓட்டல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.ஈரோட்டில்  பானிபூரி சாப்பிட்டு ரோகினி தேவி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தையொட்டி,  ஈரோடு மாநகரில் உள்ள சாலையோர பானிபூரி கடைகள், ஓட்டல் கடைகளில் நேற்று  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில்,உணவு  பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார், எட்டிக்கன் ஆகியோர் திடீர்  சோதனை மேற்கொண்டனர். இதில், ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை டெலிபோன்  பவன், காளைமாட்டு சிலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர பானிபூரி, ஓட்டல்  கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை  பயன்படுத்துகின்றனரா? அல்லது காலாவதியான உணவு பொருட்களை  பயன்படுத்துகின்றனரா? என சோதனை செய்தனர். இதில், சோதனை மேற்கொண்ட அனைத்து  கடைகளிலும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம்  உரிமம் பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம், உணவு பாதுகாப்பு உரிமம்  பெற்ற பின்னரே உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என எச்சரித்து  அறிவுரைகள் கூறினர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது:ஈரோடு  மாநகரில் சாலையோர கடைகளில் உணவு வகைகளை மக்களுக்கு பாதுகாப்பானதாக விற்பனை  செய்கின்றனரா? என இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 10க்கும்  மேற்பட்ட சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அனைத்து வியாபாரிகளும்  அன்றைய தினத்தின் விற்பனைக்கு தகுந்தாற்போல, உணவு பொருட்களை வாங்கி  பயன்படுத்துவது தெரிய வருகிறது. ஆனால், சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு  உரிமம் பெறாமல் உள்ளனர். அவர்களுக்கு அதன் அவசியம் குறித்து  விளக்கியுள்ளோம். இனிவரும் நாட்களில் சாலையோர வியாபாரிகள் உணவு பாதுகாப்பு  உரிமம் பெற்ற பின்னரே, உணவு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். அதேபோல்,பானிபூரி கடைகளில், பானிபூரியை அவர்களே  தயாரித்து விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பானிபூரியை எப்போது  தயாரிக்கப்பட்டது என்ற தேதி, காலாவதி தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய  வேண்டும் என கூறியுள்ளோம். தரமில்லாத உணவு, காலாவதியான உணவு பொருட்கள்  விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் 94440-42322 என்ற தொலைபேசி  எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 48 மணி நேரத்திற்குள் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியம்  காக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்….

The post சாலையோர ஓட்டல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Food safety department ,Erode ,food safety ,panipuri ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...