×

ஈத்தாமொழி அருகே வீட்டில் பதுக்கிய 75 கிலோ குட்கா பறிமுதல்

ஈத்தாமொழி, ஜன.29:  ஈத்தாமொழி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 75 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குமரி மாவட்டத்தில் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க, எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையில் சோதனை மேற்கொண்டு குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள். நேற்று முன் தினம், மாலை ஆரல்வாய்மொழி  சோதனை சாவடி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், டெம்போவில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட  90 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் வாகனத்தில் இருந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (25), திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மந்திரமூர்த்தி (43) ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல் நேற்று முன் தினம் இரவு,  ஈத்தாமொழி காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, சப் இன்ஸ்பெக்டர் பொன்கீதாவுக்கு தகவல் வந்தது. அதன் பேரில்  அந்த கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர் தேரிமேல்விளையை சேர்ந்த சுயம்புலிங்கம் (40) என்பவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் பெரியவிளையை சேர்ந்த ஆதிலிங்கம் (57) என்பவர் மூலம் புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் கிடைத்ததாக கூறினார்.

இதையடுத்து பெரியவிளையில் உள்ள ஆதிலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 75 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆதிலிங்கத்திடம் நடந்த விசாரணையில், கோட்டார் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் (55) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கண்ணனிடமும் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் மூவரையும் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை மற்றும் சிறார்களுக்கு விற்பனை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Ithamozhi ,
× RELATED ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் கால்நடை விழிப்புணர்வு முகாம்