×

கொரோனா பாதிப்பு எதிரொலி பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது

ஊட்டி:  கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டி அருகேயுள்ள பைக்காரா படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரி  மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள்  மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துச் செல்கின்றனர். இங்கு வரும்  பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு  இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லத்திற்கு செல்வது வழக்கம். குறிப்பாக,  அண்டை மாநிலமான கேரளா மற்றம் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா  பயணிகள் ஊட்டி - கூடலூர் சாலையில் அமைந்துள்ள பைக்காரா அணைக்கு வந்து  படகு சவாரி செய்வது வழக்கம். இதனால், இந்த படகு இல்லத்தில் எப்போதும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும்.

ஆனால், தற்போது  கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள்  மற்றும் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சியை பிற்பகல் 3 மணி வரை  மட்டுமே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது வெளி  மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே  காணப்படுகிறது. கடந்த இரு வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ள  நிலையில், பெரும்பாலான சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி  வெறிச்சோடியே காணப்படுகிறது.

அண்டை மாநிலமான கர்நாடகம்  மற்றும் கேரளாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், ஊட்டி  வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளதால், பைக்காரா படகு  இல்லத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே இங்கு வந்து படகு சவாரி செய்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால்,  சுற்றுலாத்துறைக்கு குறைந்த அளவிலான வருவாயே கிடைத்து வருகிறது. அதேபோல்,  பைக்காரா நீர் வீழச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைந்தே  காணப்படுகிறது.

Tags : Picara Boat House ,
× RELATED வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்;...