×

கடலாடி அருகே அரைகுறை சாலையால் அல்லல்படும் கிராமமக்கள்

சாயல்குடி: கடலாடி அருகே ஏ.பாடுவனேந்தல் செல்லும் சாலை முறையாக அமைக்காமல் அரைகுறையாக கிடப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி அருகே ஏ.பாடுவனேந்தல் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்திற்கு கடலாடி, முதுகுளத்தூர் சாலையிலிருந்து பிரிந்து சுமார் 2கிலோ மீட்டர் சாலை செல்கிறது. 20 வருடங்களுக்கு மேலாக சாலை வசதியின்றி குண்டும், குழியுமாக கிடந்தது. இங்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது. இரண்டு இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டது. ஒன்றரை இஞ்ச் ஜல்லிகள் கற்களுடன் கிராவல் கலந்து சாலை அமைக்கப்பட்ட நிலையில் கிடக்கிறது. பாலம் அமைக்கப்பட்ட இடங்களில் முறையாக சாலை அமைக்கப்படாததால் பாலத்தின் இருபுறமும் பள்ளம் ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது.

ஆட்டோ, நான்கு சக்கர வாகங்கள் செல்லும் போது பள்ளத்தில் மோதி வாகனம் சேதமடைந்து பழுது ஏற்படுகிறது. மேலும் கிராம மக்களின் நலனுக்காக சற்று தொலைவில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தண்ணீர் பிடித்து தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளி வரும் நிலை உள்ளது. ஆனால் முறையற்று அமைக்கப்பட்ட சாலையில் தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு செல்ல முடியவில்லை கிராமமக்கள் கூறுகின்றனர்.

கிராமத்தின் நுழைவு பகுதி வரை சாலை அமைக்காமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. எனவே புதிய சாலை அமைக்கும் பணியை தரமாக கிராமம் வரை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kataladi ,
× RELATED கடலாடியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை