×

உத்தமபாளையம் அருகே தரமற்ற வாறுகால் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


உத்தமபாளையம், ஜன. 21: உத்தமபாளையம் அருகே, தரமற்ற வாறுகால் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணிக்கான பில் தொகையை வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். உத்தமபாளையம் அருகே, கோம்பை பேரூராட்சியில் உள்ள 13வது வார்டு, வண்ணார் ஊருணி மற்றும் ஒக்கலிகர் பரவு காவல் செல்லும் சாலையில் ரூ.பல லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாறுகால் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் எடுத்து, தற்போது பணி நடந்து வருகிறது. இந்நிலையில், வாறுகால் கட்டுமானப் பணி தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தேனி கலெக்டருக்கு புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டு வாறுகால் கட்டும் இடத்தில் முற்றுகையிட்டனர். அப்போது, ‘ஏற்கனவே கட்டப்பட்ட வாறுகால் கட்டுமானத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். பாறை துகளுக்கு பதிலாக சிமெண்டால் உறுதியாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேனி பேரூராட்சிகள் துறை கட்டிட பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் கட்டுமானப் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Uththamapalaiyam ,
× RELATED உத்தமபாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்