×

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக வழக்கு மின் பொறியாளர்கள் இருவர் விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஒப்பந்த பணத்திற்கான பில்லை முடித்துதர ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் டான்ஜெட்கோ பொறியாளர் இருவரையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. சோழிங்கநல்லூரில் கடந்த 2007ல் துணை மின் நிலையம் அமைப்பதற்காக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டான்ஜெட்கோ) முனியசாமி என்பவர் ரூ.69 லடசத்து 60 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் எடுத்தார். ஒப்பந்த பணிகளை முடிப்பதற்காக தன்னிடம் ஜவஹர், காசி விஸ்வநாதன் என்ற 2 பொறியாளர்கள் தலா ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து, அடையாறில் உள்ள ஒரு ஓட்டலில் முனியசாமியிடம் 2 பொறியாளர்கள் பணத்தை வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து, இருவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னையில் ஊழல் தடுப்புகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமான பணிக்கான டைல்ஸ் வாங்குவதற்காகத்தான் ஒப்பந்ததாரர் பணம் கொடுத்தார். லஞ்சமாக அல்ல என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. மேலும், ஒப்பந்தப்படி பணியை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காததை மறைப்பதற்காகத்தான் ஒப்பந்ததார் இந்த பொய் புகாரை கொடுத்துள்ளார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...