×

தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோயிலில் இன்று தெப்ப உற்சவம் பக்தர்கள் முன்னிலையில் திருநடனக்காட்சி

நெல்லை, ஜன.20: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி நேற்று பக்தர்கள் முன்னிலையில் திருநடனகாட்சி நடந்தது. இன்று தெப்ப உற்சவம் நடக்க உள்ள நிலையில், வெளித்தெப்பத்தில் உழவார பணிகள் நேற்று விறுவிறுப்பாக நடந்தன.  ‘திருநெல்வேலி’ பெயர்வரக் காரணமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் கடந்த 9ம்தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் உள் திருவிழாவாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவின் 4ம் நாளான 12ம்தேதி நண்பகலில் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடந்தது. 10ம் திருவிழாவில் சுவாமி, அம்பாளுக்கான தைப்பூசத் தீர்த்தவாரி, தாமிரபரணி ஆற்றில் நடக்காமல் கோயில் பொற்றாமரை குளத்தில் நடந்தேறியது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

இந்நிலையில் 5 தினங்களுக்கு பின்னர் நேற்று நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று சவுந்திரசபா மண்டபத்தில் பிருங்கிரத முனி சிரேஷ்டர்களுக்கு சுவாமி திருநடனக் காட்சி விமரிசையாக நடந்தது. தொடர்ந்து சவுந்திர சபா நடராஜர் திருநடனக் காட்சியும் நடந்தது. சுவாமியும், அம்பாளும் உள்வீதி வலம் வந்தனர். சவுந்தர சபையில் அபிஷேகம், அலங்காரத்தோடு தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டுகளித்தனர். 5 தினங்களுக்கு கோயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கூட்டமும் கோயிலில் அதிகம் காணப்பட்டது.

கொரோனா பரவலால் தைப்பூச தெப்பத்திருவிழாவிற்கு திருக்கோயில் நிர்வாகம் இவ்வாண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து  இந்து அமைப்புகள் சார்பில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பரிசீலனை செய்து நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பத்தில் திருவிழா நடத்த அனுமதி வழங்கினர். இதையடுத்து நெல்லையப்பர் கோயில் வெளிதெப்பத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் உழவார பணிகள் நேற்று நடந்தன. தெப்பம் கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்தேறின. சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் தெப்ப உற்சவம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி இன்று (20ம்தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி வெளித்தெப்பத்தை சுற்றிலும் மின்விளக்கு களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

Tags : Nellaiyappar ,Temple ,Thaipusam festival ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...