நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் திமுகவில் விருப்ப மனு பெறுதல் தொடக்கம்

நாகர்கோவில், ஜன.11 :தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் குமரி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி வார்டுகளில் போட்டியிட ஏற்கனவே விருப்ப மனு அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்குரிய விண்ணப்ப படிவத்தை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய கட்டணத்துடன் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களிடம் அல்லது தலைமை கழகத்தில் ஒப்படைக்கலாம் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுதல் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலகத்தில் தொடங்கியது. விருப்ப மனுக்களை குமரி  கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ் ராஜன் பெற்றுக்கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ் உட்பட ஏராளமானோர் நேற்று விருப்ப மனு அளித்தனர். நிகழ்ச்சியில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் தில்லை செல்வம்,  முன்னாள் எம்.எல்.ஏ ராஜன்,  மாநகர துணை செயலாளர் வேல்முருகன்,  பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவுது,  முன்னாள் மீனவர் அணி அமைப்பாளர் பசலியான், மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவன், ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, குட்டி ராஜன் ,சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: