×

பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் குறைந்தால் புகார் தெரிவிக்கலாம் இதுவரை 43% கார்டுகளுக்கு விநியோகம் கலெக்டர் அனீஷ் சேகர் பேட்டி

மதுரை, ஜன. 9: பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் குறைந்தால் புகார் தெரிவிக்கலாம், இதுவரை 43 சதவீத கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி, பருப்பு. முந்திரி, திராட்சை, வெல்லம், கரும்பு மற்றும் மஞ்சள் பை உட்பட ரூ.505 மதிப்பிலான 21 வகை மளிகைப் பொருட்கள் உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பை, அரிசி கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 1,394 நியாய விலைக்கடைகளில் 9,17,537 குடும்ப அட்டைதார்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1718 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 9,19,255 அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.46,42,23,775 மதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 3,96,523 குடும்ப அரிசி (43 சதவீதம்) அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கு பணி துரிதப்பட்டுள்ளது. தெரு வாரியாக தினசரி சுழற்சி முறையில் 200 பேருக்கு டோக்கன் வழங்கி, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன், பொருட்கள் வழங்குவதில் குறைபாடு இருப்பின் துணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 9842928929ல் புகார் தெரிவிக்கலாம்’ என்றார். முன்னதாக மதுரை வடக்கு வட்டம் சரோஜினி நகர் நியாய விலைக்கடை, மதுரை தல்லாகுளம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் உள்ள நியாய விலைக்கடை, பசுமலை பகுதியில் உள்ள நியாய விலைக்கடை ஆகியவற்றில், பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Pongal ,Anish Sehgar ,
× RELATED வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை...