ஆண்டிமடம் பகுதி விவசாயிகளுக்கு நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி

ஆண்டிமடம், ஜன.9: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டாரம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வேளாண்மை துறையின் சார்பாக நடத்தப்பட்டது.இப்பயிற்சிக்கு பெரிய கிருஷ்ணாபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜோதி தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி நெல் சாகுபடியின்போது பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில்நுட்பமான தக்கைப்பூண்டு விதைப்பு, மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், சூடோமோனாஸ் மற்றும் உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல், உளுந்தை வரப்பு பயிராக சாகுபடி செய்தல், திருந்திய நெல் சாகுபடி முறையில் சீரான இடைவெளியில் நடவு செய்தல் மற்றும் கோனோவீடர் கொண்டு களை எடுத்தல், அடி மற்றும் மேல் உரங்களின் அளவுகள் குறித்தும், பூச்சி நோய்கள், எலிகளை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய இயற்கை மற்றும் ரசாயன முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் செய்திருந்தார்.

Related Stories: