×

திருவொற்றியூரில் ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் கருவி இஸ்ரோவிடம் ஒப்படைப்பு

திருவெற்றியூர்: திருவொற்றியூரில் ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இடைநிலை அமைப்பு கருவி இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே கே.சி.பி. லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு அதிக திறன் கொண்ட இயந்திர பொருட்கள், சிமென்ட், சர்க்கரை மற்றும் மின் உற்பத்தி தொழிற்சாலை போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான ராட்சத சிமினி, கனரக இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இடைநிலை அமைப்பு கருவி தயாரிக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

அதன்படி ரூ.1 கோடி செலவில் 2.8 மீட்டர் சுற்றளவில் 4.1 மீட்டர் உயரத்தில் 200 உதிரிபாகங்களுடன் முழுவதும் லேசான அலுமினியத்தால் சுமார் 700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு சூழலில் வெப்பத்தை தாங்கும் திறன் சோதனை மேற்கொள்ளப்பட்டு இந்த இடைநிலை அமைப்பு கருவி பயன்பாட்டிற்கு தயாரானது.  கடந்த 3 ஆண்டுகளாக நடந்த இந்த பணி முடிவடைந்து தயார் நிலையில் இருந்தது. பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இடைநிலை அமைப்பு கருவியை கே.சி.பி. நிறுவனத்தினர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதில் கே.சி.பி நிறுவன தலைவர் எம்.நாராயண ராவ், இஸ்ரோ நிறுவன துணை பொது மேலாளர் சீனிவாசன், மேலாளர் எட்வின் சிபி, குடியுரிமை தர குழுவை சேர்ந்த ஹரிகரன், சுகன்யா உட்பட அதிகாரிகள் இடைநிலை அமைப்பு கருவி இருந்த கன்டெய்னர் லாரியை கொடியசைத்து இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Tiruvottiyur ,ISRO ,
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...