×

கொரடாச்சேரியில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

நீடாமங்கலம், ஜன.7: கொரடாச்சேரி ஒன்றியத்திலுள்ள அபிவிருதீஸ்வரம் கிராமத்தில், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய சிறப்பு பயிற்சி மற்றும் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா நடைபெற்றது. இப்பயிற்சிக்கு தலைமை வகித்த வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் டாக்டர் சபாபதி பேசுகையில், இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாடுகளை பெருவாரியாக குறைக்க முடியும். மேலும் விதை நேர்த்தி மற்றும் சரியான ரகங்களைத் தேர்வு செய்வதன்மூலம் பெருவாரியான நோய்களை தடுக்க இயலும் என்று கூறினார். இப்பயிற்சிக்கு முன்னிலை வகித்த விரிவாக்கத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் பெரியார் ராமசாமி பேசுகையில், தொலைதொடர்பு மற்றும் சமூக வலைதளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் நேரடியாக விவசாயிகளுக்கு, விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில் நுட்பங்களை எளிதில் சேர்த்து விடுகிறது. மேலும் 1800-180-1551 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் உழவர் அழைப்பு மையத்தினை (கிசான் கால் சென்டர்) தொடர்பு கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் பெற்று பயன்பெற இயலும் என்று எடுத்துக் கூறினார். மேலும் வேளாண் தொழில்நுட்பங்களை பரப்புவதில் உழவர்மன்ற தலைவர்களின் திறன் பற்றியும் விவரித்தார். பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய உளவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் கருணாகரன் ஒருங்கிணைந்த நெல்பயிர் மேலாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களின் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார். சிறந்த இயற்கை உரங்களான தொழு உரங்கள், பசுந்தாள் உரங்கள், பசுந்தழை உரங்கள் மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோலா போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி தெளிவுபடுத்தினார். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அபிவிருதீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதவன் செய்திருந்தார்.

Tags : Koradacheri ,
× RELATED தமிழ்நாட்டுக்கு எதையும் தராத...