கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நாகர்கோவிலில் 70 பேர் கைது

நாகர்கோவில், ஜன.6: கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய, விவசாயிகள்,  விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் கன மழையால்  பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ₹30 ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ₹5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும். வாழத் தகுதியற்ற வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மழை நிவாரணத்திற்கு தமிழக அரசுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்.

அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். பருத்தி வாய்க்கால் உடைப்புகளை சரி செய்து விவசாய நிலங்கள், குடியிருப்புகளையும் பாதுகாத்திட வேண்டும். வன விலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, முருகேசன், சைமன் சைலஸ், விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் முத்துராமு, விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம், உஷா பாசி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். காத்திருப்பு போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபின்னர் தடையை மீறி காத்திருப்பு போராட்டம் தொடங்கிய நிலையில் விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

Related Stories: