×

8 பேருக்கு தொற்று உறுதி பறக்கை செட்டித் தெரு சீல் வைப்பு ரேஷன்கடை, பள்ளி மூடல்

நாகர்கோவில், ஜன.6:  பறக்கை செட்டித்தெருவில் 8 பேருக்கு தொற்று உறுதியானதால், அத்தெரு சீல்வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும், இன்னும் இரு வாரத்தில், ஒமிக்ரான் வைரஸ் பரவல் சுனாமி போல் விசுவரூபம் எடுத்து பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கத்தை  கட்டுபடுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்பதனால்,  18 வயதிற்கு கீழ் 15 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ஞாயிறு முழுஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும், 3 பேருக்கு மேல் ஒரே பகுதியில் தொற்று இருந்தால், அப்பகுதியை 10 நாட்கள் மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியில், நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட சளி பரிசோதனையில், பறக்கை செட்டித்தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கும், அருகில் உள்ள மற்றொரு வீட்டில் 2 பேர், சற்று தள்ளி ஒரு  வீட்டில் 2 பேர் என அத்தெருவில்  8 பேர் உள்பட 19 பேருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து மாநகர் நல் அலுவலர் விஜய்சந்திரன் தலைமையிலான குழுவினர், அங்கு சென்று தெருவை திரை கட்டி யாரும், உள்ளே செல்லவோ, வெளியேறவோ முடியாதபடி சீல் வைத்தனர். இந்த தெருவில் 40 வீடுகள் உள்ளன.

மேலும், அங்கு செயல்பட்ட ரேஷன் கடை 10ம் தேதி வரை மூடப்படுகிறது. அங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் பூஜை செய்ய பூசாரி மட்டும் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோல், அப்பகுதியில் உள்ள மசூதி, சர்ச் ஆகியவற்றிற்கும் யாரும் செல்ல அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாநகர் நல அலுவலர் விஜய்சந்திரன் கூறியதாவது: அரசு 3 பேருக்கு மேல் ஒரே பகுதியில் தொற்று இருந்தால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இத்தெருவில் 8 பேர் பாதிக்கப்பட்டதால், அந்த தெரு 10 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கும். மேலும் தொற்று பரவலை தடுக்க அத்தெரு மக்கள், ரேஷன்கடை ஊழியர்கள் என, 156 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.  தொற்று பரவலை தடுக்க, தனிநபர் இடைவெளி, முககவசம் அணிதல் அவசியம். தேவையின்றி மக்கள் வெளியே வருவதை தவிர்ப்பதுடன், கடைகளுக்கு சென்றால் கூட சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திறந்த அன்றே மூடல்
பறக்கை செட்டித்தெரு பகுதியில், நேற்றுதான் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. ஆனால், மாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி காரணமாக மூடப்பட்டது. இதுபோல், ரேஷன் கடையில், பொங்கல் தொகுப்பு வழங்க கூட்டம் முண்டியடித்த நிலையில், கடை சீல் வைக்கப்பட்டுள்ளதால், 10ம் தேதிக்கு பின்னர், சூழலை பொறுத்து, கடை திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

பொருட்கள் வாங்கி கொடுக்க இரு தன்னார்வலர்கள் நியமனம்
குமரியில் 3வது அலையின் முதல் தனிமைப்படுத்தல் இடமாக பறக்கை ெசட்டித் தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் வாங்க இரு தன்னார்வலர்கள் மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மொபைல் போன், அத்தெருவில் உள்ள கோயிலில், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் தேவையான பொருளை போனில் கூறினால், அவற்றை வெளியே உள்ள தன்னார்வலர்  வாங்கி சென்று அதே தெருவில் வசித்து  வரும் தன்னார்வலரிடம் ஒப்படைப்பார். அவர், பொருட்களை சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று வழங்குவார். இதுதவிர, தினசரி, நர்ஸ் ஒருவர், சென்று பரிசோதனைகள் மேற்கொள்வார். டெங்கு தடுப்பு பணியாளர்களும் சென்று காய்ச்சல் இருக்கிறதா என்பதனை  பரிசோதனை செய்வார்கள் என மாநகர் நல அலுவலர் விஜய சந்திரன் கூறினார்.

Tags : Chetti Street ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த...