×

ஆம்லெட் வருவதில் தாமதம் ஓட்டல் கடை சூறை; 7 பேர் கைது

திருமுருகன்பூண்டி:  திருப்பூர், பி.என்.ரோடு பூலுவப்பட்டி, சௌடாம்பிகை நகரில் வசித்து வருபவர் கருப்பண்ணன். இவர் பூலுவப்பட்டி ஜேக்கப் மருத்துவமனை அருகில் அய்யனார் மெஸ் என்ற  ஓட்டல் நடத்து வருகிறார். இவரது மகன் அருண்  (22). இந்த கடையில் அருணின் அண்ணன் அய்யனார், இவரது பெரியம்மா மகன் முருகன், சித்தப்பா ஆகியோரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த மெஸ்சில் வழக்கமாக சாப்பிட வரும் கரண் என்பவர் சாப்பிட முட்டை புரோட்டா கேட்டார். பின்னர் கரணுக்கு அருண் முட்டை புரோட்டா கொடுத்தார்.

அதன்பின்னர் கிரண் ஆம்லெட் கேட்டுள்ளார். அதற்கு அருண் மத்தவங்க கேட்டு இருக்காங்க. அவங்களுக்கு கொடுத்து விட்டு தருகிறேன் என்று கூறினார். இதில் கரண் ஆத்திரம் அடைந்து  அருணின் கன்னத்தில் அறைந்தார். அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத அவர் தனது நண்பர்களை செல்போனில் அழைத்தார்.  சிறிது நேரத்தில் நண்பர்கள் 6 பேர் காரில் வந்தனர்.  அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்து ரகளை செய்தனர். இதனையடுத்து அங்கு சாப்பிட்டவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து கரண் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் கருப்பணன்,  அருண், அருணின் சித்தப்பா, அருணின்  பெரியப்பா மகன் முருகன் ஆகியோரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த சேர், டேபிள், சமையல் பாத்திரங்களை உடைத்து நொறுக்கி  கொலை மிரட்டல் விடுத்தனர்.  இது குறித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம், எஸ்ஐ ராஜூ, ஏட்டு அர்ஜுனன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் குறித்து அருண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து நெருப்பெரிச்சல் வாவிபாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த 7 பேர் ஓட்டலில் தகராறு செய்தவர்கள் என்று  தெரியவந்தது. இதையடுத்து நெருப்பெரிச்சல், ஜி.என். கார்டன் பகுதியை சேர்ந்த கரண் (23), பூலுவபட்டி விக்னேஸ்வரா நகரை சேர்ந்த குமார் (30),  பூலுவபட்டி கிருஷ்ணா தியேட்டர் ரோடு, ஜேக்கப் மருத்துவமனை அருகில் வசித்து வரும் ரஞ்சித் குமார் (23),  விக்னேஸ்வரா நகரைச் சேர்ந்த  கோகுல் கிஷோர் (21), குருவாயூரப்பன் நகர், டிராக்டர்காரர் காம்பவுண்டில் வசித்து வரும் விஜயபாண்டி (21), பாண்டியன் நகர், குமரன் வீதியை சேர்ந்த பேச்சிமுத்து (25), பூலுவப்பட்டி பிள்ளையார் கோவில் பின்புறம் வசித்து வரும் அர்ஜுன் (22) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

இதில் கரண், குமார், கோகுல் கிஷோர், விஜயபாண்டி, அர்ஜூன் ஆகியோர் பனியன் கம்பெனியில் டெய்லராகவும், பேச்சிமுத்து கார் மெக்கானிக்காகவும், ரஞ்சித்குமார் கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரும், அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் தாராபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை