×

கோவையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 198 பேர் சிகிச்சை

கோவை, ஜன.3: கோவையில் அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 198 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார். இவர், பொள்ளாச்சி பகுதியில் வாகன விபத்தின் போது தலை மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் உடனடியாக அனுமதித்து அவருக்கு தேவையான அனைத்து வித அவசர சிகிச்சைகளை அளித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.

இந்நிலையில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் மோகன் குமாரை மருத்துவமனைக்கு சென்று நேற்று நேரில் சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.அதன்பின், அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்,``கோவை கங்கா மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மோகன் குமார் என்ற வாலிபரை முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஏறக்குறைய நான்கு முறை 13 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவருடைய உயிரை காப்பாற்றியுள்ளனர். தற்போது மோகன்குமார் நன்றாக உள்ளார். முதலமைச்சருக்கு அவருடைய குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்றார். பாதிக்கப்பட்ட மோகன் குமாரின் சகோதரர் கூறுகையில்,``பொள்ளாச்சியில் விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து சிகிச்சைக்காக கங்கா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உடனடியாக முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது என்னுடைய சகோதரர் மிகவும் நலமாக உள்ளார். இந்த திட்டத்தை அளித்த முதலமைச்சருக்கு மிகவும் நன்றி’’ என்றார்.

Tags : Coimbatore ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...