×

மசினகுடி சிக்கிய டி23 புலி உடல் நலம் தேறியது

ஊட்டி,ஜன.1: மசினகுடி பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சை காரணமாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் வேட்டையாடிய டி23 புலி கடந்த அக்டோபர் 15ம் தேதி உயிருடன் முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில்  பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக உயிருடன் பிடிக்கப்பட்ட இந்த புலியின் உடலில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபட்ட போது உடல் மெலிந்து காணப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையால் நல்ல ஆரோக்கியமாக மாறி உள்ளது. இதனை தமிழக முதன்மை வன பாதுகாவலர் நீரஜ்குமார் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூர் சென்று புலிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் புலியின் தற்போதைய நிலை குறித்து பார்வையிட்டுள்ளார். இதில் புலி தற்போது நல்ல ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு மைசூரில் உள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நல்ல ஆரோக்கிய நிலைக்கு திரும்பியுள்ளது.

புலி பிடிபட்ட போது மெலிந்து காணப்பட்டது. தற்போது அதன் உடல் எடை 200 கிலோ வரை அதிகரித்துள்ளது. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அதன் உடலில் ஏற்பட்டிருந்த இரண்டு பெரிய அளவிலான காயங்கள் உட்பட 8 காயங்களும் மெல்ல மெல்ல சரியாகி வருகிறது. தற்போது நல்ல முறையில் உணவு உட்கொண்டு வருகிறது. வாரத்திற்கு 10 கிலோ மாட்டிறைச்சியை உட்கொண்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்களின் உத்தரவுகளை கற்று வருகிறது. டி23 புலிக்கு இன்னும் 5 முதல் 6 மாதங்களுக்கு தொடர் சிகிச்சை அவசியம், என்றார்.

Tags : Machinagudi ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகம் சார்பில்...