×

பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மாவட்டத்தில் 1,252 கோழிப்பண்ணைகளில் 200 மாதிரிகள் சேகரிப்பு

கோவை, ஜன. 1:  கோவை மாவட்டத்தில் 1,252 கோழிப்பண்ணைகளில் இருந்து கடந்த 25 நாட்களில்  பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சுமார் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு  ஆய்வக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், பறவைக்காய்ச்சல் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனை அடுத்து, கோவை மாவட்டத்தில் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களின் டயர்கள், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பகுதிகளில் சுகாதாரத்துறையினரால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவிலிருந்து கோழி, முட்டை, குஞ்சுகள், கோழிக் கழிவுகள் ஏற்றிவரும் வாகனங்களும் கோவை மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘கோவை மாவட்டத்தில் 1,252 கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மற்றும்  நீர்நிலைகளில் உள்ள பறவைகள் ஆகியவற்றில் இருந்து கடந்த 25 நாட்களில்  பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சுமார் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு  ஆய்வக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்படவில்லை. நோயின் அறிகுறிகளான  தலை வீக்கம், தொண்டை மற்றும் தாடி பகுதிகளில் வெளுத்தும், மூக்கில் சளியுடனும், தொடை பகுதியில் உள்ள தசைகளில் ரத்தக்கசிவோடும் அதிக இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பறவைக்காய்ச்சல் தொடர்பாக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

Tags :
× RELATED மோப்பிரிபாளையத்தில் ஆதார் அட்டை திருத்த முகாம்