×

திருப்பூர் மாநகராட்சியில் குறைதீர்ப்பு முகாம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

திருமுருகன்பூண்டி:  திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முதல் மற்றும் 2ம் மண்டல  பகுதிகளில் நேற்று மக்கள் குறை கேட்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் உள்ள 11 முதல் 14 வார்டு வரை உள்ள பகுதி  பொதுமக்களிடம் மக்கள் குறை கேட்பு முகாம் 15 வேலம்பாளையத்தில் நடந்தது. மாநகராட்சி  ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்எல்ஏ  செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழக செய்தித்துறை  அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை  மனுக்களை பெற்றார்.  அப்போது அவர் பேசியதாவது :

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளியோர், மகளிர், திருநங்கைகள், மாணவ, மாணவியர், முதியோர் என  அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து  செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை  கண்டறிந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்துகொடுக்க வேண்டுமென  அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்று 200  நாட்கள் கடந்த நிலையில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.

கொரோனா நோய் அச்சுறுத்தல் காலத்தில் தமிழக மக்களின்  வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள  குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ரூ 4 ஆயிரம் மற்றும்  14 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.
மக்களை தேடி  மருத்துவம் திட்டத்தின் மூலம் நோயாளிகளின் உயர் ரத்த அழுத்தம் மற்றும்  பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்கே சென்று மருத்துவர்  மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

படுத்த  படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு மற்றும் இயன்முறை மருத்துவம் நோய் தடுப்பு  பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம்  சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மக்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது  இன்னுயிர் காப்போம் திட்டத்தினை துவக்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம்  விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்து விபத்துக்குள்ளாகும் நபரின்  இன்னுயிரை விரைவாக காப்பாற்ற முடியும்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று  வரும் மக்கள் குறை கேட்பு முகாமில்  அடிப்படை வசதி, உட்கட்டமைப்பு  வசதி, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா என பல்வேறு  கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தகுதி வாய்ந்த மனுக்கள் மீதும், இதர  மனுக்களுக்கு விரையில் தீர்வு காணவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசினார்.

தொடர்ந்து  9,10,15 வார்டுகளை  சேர்ந்த பொதுமக்களிடம் அங்கேரிபாளையம் மெயின்ரோடு கலைவாணி தியேட்டர்  சாலையில் உள்ள ஜெகா கார்டனிலும், மாலையில் அண்ணா காலனி பகுதியில் 23-வது வார்டு  முதல் 25-வது வார்டு வரை உள்ள பொதுமக்களிடம் சாமுண்டிபுரம் பகுதியில்  உள்ள  சுப்பராயகவுண்டர் மண்டபத்திலும், மாலை 4 மணிக்கு அண்ணா காலனி  21,22,30 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் புதிய பஸ் நிலையம் பின்புறம்  உள்ள செங்குந்தர் மண்டபத்திலும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகளான வடக்கு மாவட்ட  பொறுப்பாளர் தினேஷ்குமார், 15 வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் ராமதாஸ், வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர்  சிட்டி வெங்கடாச்சலம், என்ஜினீயர்  நாராயணமூர்த்தி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார்,  குழந்தைவேல், சந்திரசேகரன், அண்ணா காலனி பகுதி பொறுப்பாளர் செல்வராஜ்  உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இன்று முகாம் நடைபெறும் இடங்கள்

இன்று (31ம் தேதி) காலை 9 மணிக்கு திருப்பூர் 1  வது மண்டலத்தில் உள்ள 4 மற்றும் 5 வார்டுகளில் உள்ள  பொதுமக்களிடம்  நெருப்பெரிச்சல் ரோடு கொங்கு கலையரங்கத்திலும், காலை 10 மணிக்கு 1,2,3,  வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் பூலுவப்பட்டி நால்ரோடு அருகில் உள்ள  வி.எஸ். மகாலிலும், பின்னர், காலை 11 மணிக்கு 7,8,16 வார்டுகளை சேர்ந்த  பொதுமக்களிடம் பி.என். ரோடு, போயம்பாளையம் பஸ் நிலையம் அருகே நவமணி  வளாகத்திலும், மாலை 3 மணிக்கு 17,19,20 வார்டுகளை சேர்ந்த  பொதுமக்களிடம் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள  ஸ்ரீராமலிங்க  சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்திலும், மாலை 4 மணிக்கு 6,18,31,32,33  ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் கொங்கு மெயின்ரோடு எல்ஆர்ஜி லேஅவுட்டிலும் மக்கள் குறைகேட்பு முகாமில் அமைச்சர் மு.பெ.  சாமிநாதன் கோரிக்கை மனுக்களை  பெறவுள்ளார்.

Tags : Tirupur Corporation ,Saminathan ,
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...