×

நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தேங்கும் தண்ணீரால் டெங்கு பரவும் அபாயம்

நாகர்கோவில், டிச.30: கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் தேங்கும் தண்ணீரால், கொசு புழுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறி உள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்து தற்போது குடிநீர் வழங்கப்படுகிறது. முக்கடல் அணையில் இருந்து, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்த பின் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறும். தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை மாநகரில் குடிநீர் வினியோகம் நடக்கிறது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புக்கு பின் வெளியேறும் நீர், சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள தொட்டி வழியாக வாத்தியார்விளை ரோட்டில் உள்ள கிருஷ்ணன்கோவில் சானலில் கலந்து புதுக்குடியிருப்பில் உள்ள சுப்பையார்குளத்தில் சேரும். ஆனால் தற்போது தண்ணீர் வெளியேறும் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது தண்ணீர் வெளியேறாமல் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள தொட்டிகளில் அப்படியே தேங்கி நிற்கிறது. நீண்டநாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பாசி படர்ந்துள்ளது. இந்த தண்ணீர் நன்னீர் என்பதால் டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகி உள்ளன. இதனால் வாத்தியார்விளை, கிருஷ்ணன்கோவில் மற்றும் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் நிலை உள்ளது.  தற்போது அந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

வழக்கமாக தண்ணீர் தேங்கும் சமயங்களில் மோட்டார் மூலம் அதை சானலில் விடும் பணிகள் நடக்கும். ஆனால் தற்போது அந்த பணி நடைபெற வில்லை. மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்ற பின்னரும் கண்டு கொள்ள வில்லை. எனவே மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரடியாக ஆய்வு செய்து, தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதுடன் இனி வரும் காலங்களில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் சீராக சானலுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு