திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பு வாலிபர் மீதான தாக்குதலை கண்டித்து 3 இடங்களில் திடீர் சாலை மறியல்

திருக்கோவிலூர், டிச. 30: திருக்கோவிலூர் அருகே வாலிபர் மீதான தாக்குதலை கண்டித்து, அவரது உறவினர்கள் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் விஜயகுமார் (32). மைக் செட் மற்றும் பந்தல் போடும் பணி செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் விஜய் என்கிற அன்பு (24) என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் விஜயகுமார், அங்குள்ள வீரனார் கோயில் அருகே காட்டுப்பகுதிக்கு சென்றபோது அங்கு ஆயுதங்களுடன் வந்த அன்பு, சக்திவேல் மகன் வெங்கடேசன் (24) மற்றும் பெயர் தெரியாத 3 பேர் உள்பட 5 பேரும் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரி வெட்டி உள்ளனர். வெட்டுக்காயம் அடைந்த விஜயகுமார், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திய 5 பேரும் அவரை நாயனூர் மலைப்பகுதி வரை விரட்டிச்செனறு மடக்கினர்.

பின்னர் அவரது கை, கால் மற்றும் வயிற்று பகுதியில் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்து விஜயகுமார் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ேமல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அன்பு உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து விஜயகுமாரின் உறவினர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை அருகே நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை.

தொடர்ந்து அங்கிருந்து சென்று அரகண்டநல்லூர் அருகே மணம்பூண்டி நான்குமுனை சந்திப்பில் மறியலில ஈடுபட்டனர. அப்போது அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களிடம் விஜயகுமாரின் உறவினர்கள் கூறும்போது, ஏற்கனவே முன்விரோதம் காரணமாக அன்பு மீது புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தற்போது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். முன்பே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது, எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் சிறிது நேரத்தில் தேவனூர் நான்குமுனை சந்திப்பில் திரண்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: