×

சபரிமலை கோயிலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் ஐயப்ப பக்தர்கள்

பெரியகுளம், டிச. 25: சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் கடந்த 2010ல் புண்ணிய பூங்காவனம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இந்த அமைப்பில் உள்ள பக்தர்கள் கார்த்திகை மாதம் கோவில் திறக்கப்படுவதிலிருந்து மகரஜோதி முடிந்து, கோவில் நடை சாத்தும் வரை சபரிமலையில் தங்கி, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி வருகின்றனர். சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பா ஆகிய இடங்களில் பக்தர்கள் வீசும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களிடம் சென்னை பக்தர்கள், ‘சன்னிதானத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதகமான பொருட்களையும் எடுத்து வரக்கூடாது. சபரிமலையில் குப்பைகளை சிதறுவதை தவிர்க்க வேண்டும். புனித நதியான பம்பா, அதன் சுற்றுப்புறங்கள், சன்னிதானம் ஆகியவற்றை தூய்மைப்படுத்த ஒரு மணி நேரம் செலவிட வேண்டும்.

பம்பை நதியில் எண்ணெய் அல்லது சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. உடைகள் அல்லது துணிமணிகளை பம்பை நதிக்கரையில் விட்டுச் செல்லக்கூடாது. கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் குப்பைகளையும் அசுத்தங்களையும் விட்டுச் செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும், நெய்யபிஷேக கடமைகளை முடித்தவுடன், புண்ணிய பூங்காவனம் அலுவலகத்திற்கு வந்து, அவர்களின் அனுமதி பெற்று ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் அந்த சன்னிதானப் பகுதியை தூய்மைப் படுத்த வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்த்து சபரிமலையை ஒரு புண்ணிய பூங்காவனமாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Ayyappa ,Sabarimala temple ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்