×

பழங்குடியினரின் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கம்

ஊட்டி, டிச.24: ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் பழங்குடியினரின் வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் மூலிகைகள் என்ற தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் வரவேற்றார். கருத்தரங்கில், பஞ்சாய்த்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு தேசிய நிறுவனத்தின் உதவி பேராசிரியர் சத்யரஞ்சன் மஹாகுல் தலைமை பேசுகையில்,``பழங்குடியினரின் வாழ்வாதாரத்துக்காக வாய்ப்புகள் ஏற்படுத்த, அவர்களுக்கான நிலங்களையும், வளங்களையும் பாதுகாக்க வேண்டும். வாய்ப்புகளை ஏற்படுத்த பல்வேறு யுக்திகளை கையாள வேண்டும்.

அவர்களுக்கான வாய்ப்புகள் விநியோக முறையல் இல்லாமல், உரிமையாக இருத்தல் வேண்டும். அவர்களின் சமூகம் சார்ந்ததாக வாய்ப்புகள் அமைய வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு அதிகாரம் மற்றும் உரிமை வழங்க வேண்டும். அவர்களுக்கான சுய ஆளுமையை ஏற்படுத் வேண்டும். வாழ்வாதாரம், மொழி, அறிவை அங்கீகரிக்க வேண்டும். பழங்குடியினரின் மூலிகை சாகுபடிக்கு காப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலை, வேலை வாய்ப்புகள் போன்றவைகளை வழங்க வேண்டும்’’ என்றார்.  பாண்டிச்சேரி பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் செல்ல பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,

``மேற்கு தொடர்ச்சி மலைகள் பல்லுயிர் சூழல் மண்டலமாக உள்ளது. இங்கு ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்குயினங்கள் உள்ளன. மேற்கு மலை தொடரில் உள்ள தமிழநாட்டில் 36 பழங்குடியினர் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன. அவற்றை காப்பாற்ற பழங்குடியினர் மேற்கொண்டு வந்த முறைகளை போற்ற வேண்டும்.  அவர்கள் பாரம்பரியமாக செய்து வந்த வேளாண்மை, வேட்டை, தேன் சேகரிப்பு, விலங்குகள் பராமரிப்பு ஆகிய வாழ்வாதார முறைகள் தொடர முடியாத வகையில் இயற்கை சூழல் மாறியுள்ளது. இயற்கை வளங்களை பயன்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

வன பொருட்களை சேகரிக்கவும், சந்தைப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவை பொருளாதார ரீதியாக இல்லாமல், அவர்களின் கலாசாரம், பண்பாட்டோடு இசைந்து இருக்க வேண்டும். வளங்கள் நிறைந்த வனங்கள் மற்றும் மலைகளில் வசிக்கும் இந்த மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த, பொருளாதார கண்ணோட்டமாக இல்லாமல் அவர்களுடைய பண்பாட்டு அடிப்படையில் இருந்தால் வளர்ச்சி ஏற்படும்’’ என்றார். தொடர்ந்து பலரும் இந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள்.  இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Tags : National Seminar on Livelihood Opportunities of ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ