×

மணமேல்குடி அடுத்த ஒல்லனூரில் பள்ளிக்கு அருகேயுள்ள சிதிலமடைந்த விஏஓ அலுவலகத்தை இடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

அறந்தாங்கி, டிச.24: மணமேல்குடி அருகே ஒல்லனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மாணவர்களின் நலன் கருதி இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணமேல்குடியை அடுத்த காரக்கோட்டை ஊராட்சி ஒல்லனூரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட இக்கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் இந்த அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் தற்போது இக்கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து, சிமெண்ட் காரைகள் கீழே கொட்டி வருகின்றனர். கட்டிடத்தில் கையை வைத்தாலே கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. தற்போது இப்பள்ளியில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார். சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எந்த நேரமும் இடியும் நிலையில உள்ளதால், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒல்லனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபால் கூறியது: ஒல்லனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து, கீழே இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தால், பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் சேதமடைந்துள்ள கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் கூறியும் அவர்கள் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ollanur ,Manamelkudi ,
× RELATED புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி