×

பேராவூரணி அருகே கோயில் நிலத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

பேராவூரணி, டிச.23: பேராவூரணி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக கோயில் நிலத்தில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கொட்டகையை அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினர். பேராவூரணி அருகே காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள பாதையை இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் பாதையை அடைத்து, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் கொட்டகை அமைத்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை மறியல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நில அளவையர் மூலம் அளவீடு செய்ததில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியானது. இதனைத்தொடர்ந்து தாசில்தார் சுகுமார் மேற்பார்வையில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேல், காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், கோயில் நிர்வாகிகள் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், ஆய்வாளர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கொட்டகை அகற்றப்பட்டு போக்குவரத்து பாதை சீரமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றி பாதைவசதி செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Peravurani ,
× RELATED மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம்...